ஶ்ரீவித்யா சாதனையின் துவக்கத்தில் திரிபுர சித்தாந்தம் மற்றும் மந்த்ர தீக்ஷை வழங்கும் முன்பாக மூன்று முக்கியமான தீக்ஷைகள் வழங்கப்படும். முதலில் சாம்பவி தீக்ஷை, இரண்டாவது ஷக்தி தீக்ஷை மற்றும் இறுதியாக மந்த்ரி தீக்ஷை கலசாபிஷேகத்துடன் வழங்கப்படும். அதன் பிறகு ஈர உடையை களைந்து, மாற்று வஸ்திரம் அணிந்து பல்வேறு ந்யாஸம் மற்றும் சுத்தி கிரியைகள் நடைபெறும். தீக்ஷையின் போது சில கிரியைகள் மாணவரின் கண்களை மறைத்தும், சில கிரியைகள் கண்கள் திறந்த நிலையிலும் செய்யப்படும். அதன் பிறகு திரிபுர சித்தாந்தம் உபதேசத்தைத் தொடர்ந்து, சில கிரியைகள் நடைபெறும். இந்த நிலையில் குருபாதுகா மந்த்ரம், கணபதி மற்றும் பாலா மூல மந்த்ரங்கள் உபதேசம் செய்யப்படும். இவை ஶ்ரீவித்யையின் துவக்க நிலை உபதேசத்தின் போது செய்யப்படும் சில செயல்முறைகள் ஆகும்.
பல சாதகர்களும் “ஒரு மந்த்ரம் – ஒரு தேவதை” சாதனா முறையை அதன் அர்த்தம் அறியாமலேயே பின்பற்றுகின்றனர். இந்த முறை சிரத்தையையும், பக்தியையும் மேம்படுத்த உதவும். ஆனால், சாதனை செய்யும் மந்த்ரமோ – தேவதையோ சாதகருடைய நற்கதிக்கு பொருத்தப்படவில்லை எனில், நற்பலன்களை காட்டிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வல்லது. “ஒரு மந்த்ரம் – ஒரு தேவதை” சாதனா முறையில் மோக்ஷத்தை அடைய விழையும் சாதகருக்கும், அவரைச் சார்ந்தவருக்கும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் உடல்நலக்குறைபாடு உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது போன்ற எதிர்மறை விளைவுகளை தவிர்க்க ஶ்ரீவித்யா தந்த்ர பத்ததியில் க்ரம சாதனை முறை பின்பற்றப்படுகிறது. க்ரம சாதனை மூலம் சாதகரின் முதிர்ச்சி மற்றும் பயிற்சியை பொறுத்து அவருடைய ஆன்மீக வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு தேவதை சாதனை செய்யும் போதும், அதன் பலன் சாதகனை எதிர்மறை விளைவுகளால் பாதிக்கா வண்ணம் இருத்தல் வேண்டும். உதாரணத்திற்கு, காளிதேவி சாதனை செய்யும்போது தந்த்ர பத்ததியில் வலியுறுத்தப்படும் தனகாளி போன்ற செல்வ செழிப்பை வழங்கும் அங்க – உபாங்க தேவதை சாதனை செய்வது முக்கியத்துவம் பெறுகிறது.
துரதிஷ்டவசமாக அண்மை காலத்தில் சம்பிரதாய அனுஷ்டானங்களை புறக்கணித்தபோதிலும், ஶ்ரீவித்யையை போதிக்கும் பல நவீன குருமார்கள், திரிபுர சித்தாந்தம் கூட ஆரம்பநிலையில் தீக்ஷையில் அளிப்பது இல்லை. சிஷ்யரின் கர்ம சுமை கூடாதிருக்க வேண்டி பலரும் தீக்ஷை அளிக்காமல் வெறும் மந்த்ர உபதேசம் மட்டுமே அளிக்கின்றனர். குரு சம்பிரதாயத்தில் வழிகாட்டியுள்ள முறையை பின்பற்றி கலசத்துடன் பூஜையும் செய்து படிப்படியாக பல்வேறு நிலைகளில் ஶ்ரீவித்யா மந்த்ர தீக்ஷையும் உபதேசமும் வழங்க வேண்டும். ஶ்ரீவித்யா தந்த்ர சம்பிரதாயத்தில் வலியுறுத்தப்படும் வழிமுறைகளை விடுத்து ஆன்லைன் வர்த்தகம் போலவும், கூட்டு/தனிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவும் மந்த்ர உபதேசம் அளிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.